×

புல்லட்சாமி குரூப்புக்கு தாவ காத்திருக்கும் தாமரை கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தா மரையில் இருந்து வேறு கட்சிக்கு தாவ திட்டம் போட்டுள்ள தந்தை, மகனை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கதர் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த முழம்குமார், தனது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கை முடித்து வைப்பதாக இருந்தால் தாமரை கட்சிக்கு வருகிறேன் என்று நிபந்தனை விதித்து, அப்படியே கட்சி தாவினார். மற்றொரு நிபந்தனையாக எனக்கும், மகனுக்கும் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு முழம்குமார் தாமரை கட்சியில் சேர்ந்தார். சொன்னபடி பணத்தை வாரி இறைத்து 2 தொகுதிகளிலும் தந்தையும் மகனும் வெற்றி பெற்றனர். இந்நிலையில்தான் பிரச்னையே ஆரம்பித்தது.

அதாவது கடந்த இரண்டரை ஆண்டுகளாக வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கை தாமரை அமைச்சர்கள் முடித்து வைக்கவில்லையாம். இந்த வழக்கை காரணம் காட்டியே முழம்குமாரை ‘அலறலில்’ வைத்துள்ளனர். கட்சி தாவினால் சட்டம் தன் கடமையை செய்யும், கட்சியை விட்டு விலகினால் அரசியலில் போட்டியிட முடியாத அளவுக்கு செக் வைத்துவிடுவோம் என்று தான் டெல்லியில் இருந்து தகவல்கள் வருகிறதே தவிர, வழக்கை முடித்து வைக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லையாம். சொந்த ஊரில் இருந்து பிரச்னையை சரி ெசய்ய முடியாத நிலையில், லோக்கல் அமைச்சர்களை பிடித்து டெல்லி சென்று பல கட்ட பேச்சு நடத்தியும் வழக்கை வாபஸ் பெற முடியவில்லையாம்.

இதனால் கடந்த ஒரு மாதமா தந்தையும் மகனும் விரக்தியில் இருக்காங்க. தாமரை கட்சியின் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு எல்லாம் போவது இல்லையாம். கட்சியின் முக்கிய கூட்டத்துக்கு மட்டும் தந்தையும், மகனும் போறாங்களாம். வழக்கை வாபஸ் பெறும் வரை கட்சி வேலைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லையாம். இதற்கிடையில் புல்லட்சாமி கட்சியில் தாமரையின் 2 எம்எல்ஏக்களும் அதிகமா நெருக்கம் காட்டி வர்றாங்களாம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் புல்லட்சாமி கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவேன். தாமரையில் உழைப்புக்கும் மதிப்பில்லை… அவர்கள் தேர்தலுக்கு முன்பாக கொடுத்த சத்தியத்தையும் மறந்துட்டாங்க…

இனி, தாமரை கட்சியில் இருந்தால் நாங்கள் காணாமல் போய்விடுவோம். புல்லட்சாமியை வைத்தே வழக்கை காலி செய்யலாம் என்ற முடிவுக்கு தந்தையும், மகனும் வந்திருக்காங்களாம். அப்புறம் வழக்கிற்கு பிறகு மக்கள் மத்தியில் எனது செல்வாக்கு குறைந்து வருகிறது என தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறி வருகிறாராம். இதனையறிந்த மற்ற தாமரை எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரிடம் பேசவே பயப்படுகிறார்களாம். காரணம், யாராவது நம்மை தாமரை கட்சியில் இருந்து கட்டம் கட்டிவிடப்ேபாறாங்க என்ற பயம்தான்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே ரெய்டில் அரை கோடி காக்கிகளிடம் எப்படி சிக்கியது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர மாநில எல்லையான குடியான பெயர் கொண்ட பகுதியில் மலை அடிவாரத்தில் பெரிய அளவில் பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருதாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காக்கி அதிகாரிகள் உள்ள ஸ்டேஷனுக்கு புகார்கள் சென்றாலும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், நாங்க போகும்போது அங்க யாருமே இல்லை என்று மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு பொய்யான தகவலை தட்டிவிட்டாங்களாம். காரணம், அந்த குரூப்பிடம் இருந்து ‘கட்டிங்’ மாதா மாதம் சரியாக போய் கொண்டிருக்காம். இதையறிந்து மாவட்ட காக்கி உயரதிகாரி, சூதாட்ட கும்பலை பிடிக்க திட்டமிட்டார்.

அதன்படி பயிற்சி ஏஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் மலை அடிவாரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினாங்களாம். அப்போது, சூதாடிக்கொண்டிருந்த 17 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியது. பதினைந்துக்கும் மேற்பட்டோர் தப்பிச்சிட்டாங்களாம். பிடிபட்டவர்களிடமிருந்து செல்போன்கள், 3 பைக்குகள் மற்றும் ரூ.52 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த கும்பலை குடியாத்தம் தாலுகா போலீசில் ஒப்படைச்சாங்களாம். அப்போது தான் உள்ளூர் காக்கிகளுக்கே தகவல் தெரியவந்து ஷாக் ஆனாங்களாம். ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை சூதாட்டம் நடத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்.

ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய அளவில் சூதாட்டம் நடந்து வரும் சம்பவம் வெயிலூர் மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் தள்ளி உள்ளது. இந்த கும்பலுக்கு போலீசார் யாராவது துணையாக இருக்கிறார்களா என்றும் ரகசிய விசாரணை நடந்து வருவதால் விரைவில் காக்கியில் உள்ள கருப்பு ஆடுகள் சிக்குவார்கள் என்ற பேச்சுதான் மாவட்ட காக்கிகள் இடையே ஓடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரியவரிடம் ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்த காக்கி அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மன்னர் மாவட்டத்தில் உள்ள ஒரு சப் டிவிஷனில் வேல் பெயர் கொண்டவரான காக்கி அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த காக்கி அதிகாரிக்கு கீழ் உள்ள சப்-டிவிஷன் பகுதியில் சமீபத்தில் தொழிலதிபர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் தனிப்படையினர் கொள்ளையர்களை விரைந்து கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தார்களாம். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 90 பவுன் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் தான் தங்கியிருக்கும் வீட்டில் அந்த அதிகாரி வைத்துக்கொண்டாராம்.

இந்த தகவல் தனிப்படை காக்கிகள் மூலம் நகை பறிகொடுத்தவருக்கு தெரிய வந்ததாம். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை எப்படி போய் அந்த காக்கி அதிகாரியிடம் கேட்பது என அவரது நெருங்கிய நண்பரிடம் புலம்பியுள்ளார். இதனையடுத்து அந்த நண்பர், தனக்கு நெருங்கிய உறவினரான மேல் உயரதிகாரியிடம் நடந்த சம்பவத்தை போனில் தெரிவித்துள்ளார். அந்த உயரதிகாரி நேரிடையாக தலையிட்டு சம்பந்தப்பட்ட காக்கி அதிகாரியிடம் பேசி நகைகளை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். அந்த காக்கி அதிகாரியும் நகைகளை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரையிலும் சம்பந்தப்பட்டவரிடம் நகைகள் போய் சேரவில்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post புல்லட்சாமி குரூப்புக்கு தாவ காத்திருக்கும் தாமரை கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus Party ,Bullatsamy ,Tha Marai ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...